BREAKING NEWS
Search

இராக்கதன் திரை விமர்சனம்!

இராக்கதன் படம் எப்படி இருக்கு!

திருச்சியில் அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்  நாயகன் விக்னேஷ்  இவருக்கு  மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பது  ஆசை  இதற்காக பல முயற்சிகள் எடுக்கிறார். நாயகி காயத்ரி  மற்றும் தினேஷ் கலைச்செல்வன், இவர்கள் இருவருக்கும் சிறுவயது முதல் நண்பர்கள்.  ஒரு கால கட்டத்தில் நாயகன் விக்னேஷ்  -காயத்ரி இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.

குடும்ப சூழ்நிலை காரணமாக தனது  மாடலிங் கனவை கைவிட்டு விட்டு வேறு வேலைக்குச்செல்கிறார் நாயகன் விக்னேஷ்  எதிர்பாரா விதமாக ரியாஸ்கான் நடத்தும் மாடலிங் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வருகிறது.

இதற்காக சென்னை செல்லும் நாயகன் சில மாதங்கள்  கடந்த நிலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரது அருகில், மாடலின் நிறுவனத்தின்  உரிமையாளரான றியாஸகானும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி வம்சி கிருஷ்ணா, கொலைக்கான பின்னணி  காரணத்தை  கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’இராக்கதன்’ படத்தின் மீதிக்கதை..

போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும்  வம்சி கிருஷ்ணா நேர்மையான காவல்துறை அதிகாரியாக  காக்கி சட்டை போடாமல் கம்பீரமாக வலம்  வருகிறார். இதுவரை வில்லனாக பார்த்த நமக்கு  ஒரு பெண் குழந்தையின் அப்பாவாக நடித்து  மனதில் இடம்பிடிக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் பாஸ்கருக்கு இது முதல்படம் போல இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.. படத்தில் பார்ப்பதற்கு நிஜ மாடல் போல இருக்கிறார். காதல்,ஆக்ஷன் , செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, படத்தில் காட்சிகள்  குறைவாக இருந்தாலும் கொடுத்த வேலையை  சரியாக செய்திருக்கிறார்.   நாயகனின் நண்பன்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன்,  படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின்  இறுதிக்காட்சியில் இவருடைய நடிப்பு   படம் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வரவழைத்து விடும்.

மாடலிங் நிறுவனம்  நடத்துபவராக  நடித்திருக்கும் ரியாஸ் கான், மாறுபட்ட வேடத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார்.  நிழல்கள் ரவி, சாம்ஸ், சஞ்சனா சிங் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத  கதைக்களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பதோடு, தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களின் துன்பங்களை மட்டுமே படமாக்கி வரும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ஆண் தனது குடும்பத்திற்காகவும், தனது கனவிற்காகவும் எதிர்கொள்ளும் துன்பங்களை  அழுத்தமாக  சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் : வம்சி கிருஷ்ணா, ரியாஸ்கான்,  விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன், நிழல்கள் ரவி, காயத்ரி ரெமா ,சஞ்சனா சிங்

இசை :  பிரவீன் குமார்

இயக்கம் : தினேஷ் கலைச்செல்வன்,

மக்கள்  தொடர்பு : நித்திஷ்
,




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *