குழலி படம் எப்படி இருக்கு!
சாதி பாகுபாடு நிறைந்த கிராமத்தில் விக்னேஷ், ஆரா இருவரும் ஒரே வகுப்பில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் இருவரும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் . படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று இருவரும் எண்ணுகின்றனர். இதே சமயம் இவர்களது காதல் விவகாரம் ,இவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வருகிறது. இறுதியில் விக்னேஷ், ஆரா காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே ‘குழலி’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் காக்கா முட்டை விக்னேஷ், கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆரா, கவனிக்க வைக்கிறார். நடனம், நடிப்பு என அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
நாயகியின் அம்மாவாக வரும் செந்திகுமாரி வழக்கம்போல் வரவேற்புப் பெறுகிறார். சாதியப் பெருமிதம் பேசும் அவர் இறுதிக்காட்சியில் செய்யும் செயல் சிறப்பு. மஹா, ஷாலினி, அலெக்ஸ் உள்ளிட்ட அனைவரும் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள்.
சமீரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. டி.எம்.உதயகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றபடி பயணிக்கிறது. .
காதலுக்காக எதையும் தூக்கிப்போடுகிறவர்கள் மத்தியில் கல்விக்காகக் காதலைத் துறக்கவும் துணியும் புதிய இளையவர்களைக் காட்டி புது நம்பிக்கையூட்டுகிறார் இயக்குநர்.என்ன தான் நாகரீகமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்தாலும், ஏதாவது ஒரு மூளையில் சாதி ஒடுக்குமுறையும், ஆணவக்கொலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, ஒரு சிறிய நம்பிக்கையுடன் படம் முடிந்திருந்தால் இன்னமும் இந்தப் படத்தை ரசித்திருக்க முடியும்.
நடிகர்கள் : விக்னேஷ், ஆரா, மஹா, ஷாலினி செந்தி குமாரி, அலெக்ஸ்
இசை: டி.எம்.உதயகுமார்
இயக்கம்:சேரா கலையரசன்
மக்கள் தொடர்பு அதிகாரி : ரியாஸ் அஹமத்