ஜீவி 2 படம் எப்படி இருக்கு !
2019 ஆம் ஆண்டில் வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள்,திரையுலக பிரபலங்கள் என அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஜீவி. முதல் பாகத்தின் தொடர்ச்சியான ‘ஜீவி 2’ கதையும் அதே தொடர்பியல் விதி மூலம் பயணிக்கிறது.
ஆட்டோ ஓட்டுனராக நாயகன் வெற்றி தன் மனைவி அஸ்வினியின் மருத்துவ செலவை சமாளிக்க கார் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறார் தனது மனைவி அஸ்வினியின் கண் ஆபரேஷனுக்காக 8 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அஸ்வினியின் பூர்வீக சொத்து ஒன்றும் கை கொடுக்காமல் போய் விட . அதே நேரம் அவர் வாங்கிய கார் பழுதாகி விடுகிறது இது ஒருபக்கம் இருக்க அக்கா மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. இந்த சூழலில் புதிதாக அறிமுகமாகிறார் பணக்காரர் முபாஷிர்
புது நண்பன் வீட்டுக்கு வெற்றியும், கருணாகரனும் வருகின்றனர் வீட்டைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். தற்போது இருக்கும் சூழ்நிலையை சமாளிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது முபாஷிரின் வீட்டிலேயே பணம், நகைகளை கொள்ளையடிக்க இருவரும் திட்டம் தீட்டுகிறார்கள். இறுதியில் நகைகளை கொள்ளையடித்தார்களா? இல்லையா? என்பதே ’ஜீவி 2 படத்தின் மீதிக்கதை.
வெற்றியைப் பொறுத்தவரை சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது இயல்பான நடிப்பால் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்துகிறார். கண் பார்வை இல்லாதவராக வரும் நாயகி அஸ்வினியின் முகமும் வசன உச்சரிப்பும் அவர் ஏற்ற வேடத்துக்கு நியாயம் செய்ய துணை நிற்கின்றன.
கருணாகரன் முதல் பாகத்தைப் போலவே இதிலும் படம் முழுவதும் வருகிறார். காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர பாத்திரத்தையும் தன்னால் தாங்க முடியும் என்று இன்னும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கருணாகரன்.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி, மைம் கோபி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜவஹர், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் முஷாபிர் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
டி.பிரவீண்குமாரின் ஒளிப்பதிவு வெகு நேர்த்தி என்றால் கே.எல்.பிரவீணின் படத்தொகுப்பு விறுவிறுப்பு. சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது ‘நீ நீ போதுமே’ பாடலும், பாடல் காட்சிகளும் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் ரசிக்க வைக்கிறது.
முதல் பாகத்தில் வேறு ஒருவரின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கிய வி.ஜே.கோபிநாத், இரண்டாம் பாகத்தில் கதை எழுதி இயக்கியிருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தையும் அதன் தொடர்ச்சி போல மாற்றி ஒரு கிரைம் திரில்லராக கொடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் வி.ஜே.கோபிநாத்.வழக்கமான மசாலா படங்களைப் பார்த்து சலித்துப் போன ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்தப் படம் வித்தியாசமான விருந்து படைக்கும் என்பதில் ஐயமில்லை.
நடிங்கள் : வெற்றி, கருணாகரன் , அஸ்வினி, ரோகினி, மைம் கோபி, முபாஷிர், ஜவஹர்
இசை : சுந்தரமூர்த்தி
இயக்கம் : வி ஜே கோபிநாத்
மக்கள் தொடபு : ஜான்