BREAKING NEWS
Search

ஹாஸ்டல் – விமர்சனம்

ஹாஸ்டல் – விமர்சனம்

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் நாயகன் அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த விடுதிக்கு பொறுப்பாளராக முன்னாள் ராணுவ அதிகாரி நாசர், காவலாளியாக ‘முண்டாசுப்பட்டி’ராம்தாஸ் இருக்கிறார்கள். மாணவர்கள் மட்டுமே தங்கும் அந்த விடுதியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு உதவி செய்தால் பணம் தருகிறேன் என்று சொல்லி அசோக் செல்வனிடம் உதவி கேட்கிறார் ப்ரியா பவானி சங்கர்.

பணத்துக்கு ஆசைப்பட்டு பிரியாவை பாய்ஸ் ஹாஸ்ட லுக்குள் அழைத்துச் செல்கிறார் அசோக் செல்வன் ஹாஸ்டலுக்குள் பெண் நுழைவதை பார்த்து விடும் முனிஸ்காந்த் அதை நாசரிடம் போட்டுக் கொடுக்கிறார். உடனே நாசர் சோதனை செய்ய அறை அறையாக வருகிறார். அவருக்கு தெரியாமல் ப்ரியாவை தப்பிக்க வைக்க அசோக் செல்வனும் அவருடைய நண்பர்களும் முயற்சி செய்கிறார்கள். இறுதியில் நண்பர்கள் முயற்சியில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே ’ஹாஸ்டல்’படத்தின் மீதிக்கதை.

நாயகன் அசோக் செல்வன் முதல் முறையாக முழுநீள காமெடி படத்தில் நடித்திருக்கிறார். கொடுத்த வேலையை சரியாக மட்டும் அல்ல சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி ப்ரியா பவானி சங்கர் கொடுத்த வேலையை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். காதல் காட்சி இல்லையென்றாலும் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார்.

நண்பராக வரும் சதீஷ், நாசர், ராம்தாஸ் ஆகியோர் பாத்திரம் அறிந்து மிகையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் பேயாக வரும் நிஷா தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்துள்ளார், சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

போபோ சசியின் இசையில் கானா பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. நகைச்சுவைக் கதைக்குத் தேவையான துள்ளலான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் . கல்லூரி விடுதி என்ற ஒரே ஒரு களத்தில் முழு படத்தையும் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்

மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான அடி கப்யாரே கூட்டமணி என்ற ஹாரர் கலந்த காமெடி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஹாஸ்டல் திரைப்படம். முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பியிருக்கும் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன், படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும், என்று உழைத்திருக்கிறார். அவரது உழைப்பு வீண் போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நடிப்பு: அசோக்செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், கிரிஸ், சதிஷ், ரவிமரியா, முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, முண்டாசுபட்டி ராமதாஸ்,

இசை: போபோ சசி

இயக்கம்: சுமந்த் ராமகிருஷ்ணன்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *