தூநேரி – விமர்சனம்
சென்னையில் பணி புரியும் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்திக் மகளின் பள்ளித் தோழியை அவளது சித்தி கொடுமைப் படுத்தப்படுகிறாள். இதை அறிந்த இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பாவிடம் சொல்ல, அந்த சித்தி போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து கலாட்டா செய்து விட்டுப் போகிறாள். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர்க்கு ஊட்டி அருகில் உள்ள தூநேரி என்ற ஊருக்கு மாற்றல் ஆகிறது . மனைவி மகள் மகனுடன் தூநேரிக்கு வரும் இன்ஸ்பெக்டர் கல்லறை பக்கத்தில் உள்ள வீட்டில் தங்குகிறார் .
தூநேரி கிராமத்தில் காவல்காரனாக இருந்து பின்னர் மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு , ஒரு நிலையில் கொல்லப்பட்ட கருப்பசாமியின் ஆவி உலவி வருவதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தைகளை பேய் பயமுறுத்துகிறது. இதை முதலில் நம்ப மறுக்கும் இன்ஸ்பெக்டர் பின்னர் அது உண்மைதான் என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறார். இதற்கெல்லாம் காரணம் அந்த ஊரில் இருக்கும் மந்திரவாதிதான் என்று கருதி அவரை கைது செய்கிறார். இதற்கிடையில் இன்ஸ்பெக்டரின் மனைவி மற்றும் குழந்தைகள் பேயிடம் சிக்கிக்கொள்கின்றனர். இறுதியில் இன்ஸ்பெக்டர் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே “தூநேரி” படத்தின் மீதிக்கதை.
அம்மா, அப்பா, குழந்தை செண்டிமெண்ட்டுடன் பேய் கதை அமைத்திருக்கும் இயக்குனர் சுனில் டிக்ஸன் திரைக் கதையில் ஆவி பறக்க வைத்திருக்கிறார்.
கருப்பசாமியாக வரும் ஜான் விஜய் வழக்கமான பாணியிலிருந்து மாறி மாற்பட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார். தன்னை திட்டுபவர்களை அடித்து துவம்சம் செய்வதும் இறந்து ஆவியான பிறகு பிள்ளை பாசத்தால் உருகுவதுமாக மனதை கவர்கிறார்.
நாயகன் நிவின் கார்த்திக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். நிவின் மனைவியாக வரும் மியாஸ்ரீ கணவன் மற்றும் குழந்தைகள் மீது அன்பை பொழிவதும் அவர் மீது பேய் இறங்கிய பிறகு குழந்தைகளை கொல்ல முயல்வது என தன்பங்குக்கு பயமுறுத்துகிறார். குழந்தைகள் அஷ்மிதா, நகுல், அபிஜித், மூவரின் நடிப்பும் எதார்த்தமாக அமைந்திருக்கிறது. வில்லி மிரட்டுகிறார்.
கலையரசனின் இசையும் காட்சிகளை மேம்படுத்தி காட்டி திக் திக் நிமிடங்களை உருவாக்குகிறது. கலேஷ் அல்சன் ஒளிப்பதிவு கதையின் மிரட்சியை கடைசிவரை தக்க வைக்கிறது.
நடிப்பு: ஜான் விஜய், நிவின் கார்த்திக், மியாஸ்ரீ, மரியா சார்ம், அஷ்மிதா, நகுல், அபிஜித், சாத்விகா, சந்தோஷ், மணிகண்டன், கிருஷ்ணகுமார்
இசை: கலையரசன்
இயக்கம்: சுனில் டிக்ஸன்
தயாரிப்பு: ஷேடோ லைட் என்டர்டெயின்மென்ட்
பி ஆர் ஒ : ஏ.ஜான்