கோடியில் ஒருவன் – விமர்சனம்
செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல். தயாரிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா, திவ்யா பிரபா, ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன், பூ ராமு, ஆதித்யா கதிர், சூரஜ் பாப்ஸ், பிரபாகர், சச்சின் கெடேகர், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கோடியில் ஒருவன்’
உள்ளூர் தேர்தலில் போட்டியிடுமாறு இளம் பெண்ணை பெரிய ஆள் கேட்கிறார். அந்த தொகுதி பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால் தனக்கு சரிபட்டு வரும் நபரை போட்டியிட வைக்க விரும்புகிறார். ஆனால் அந்த பெண் துணிச்சலானவர். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்த அதிகாரம் படைத்த நபரின் திட்டம் எதுவும் நடக்கவில்லை. அதனால் அந்த பெண்ணை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். அவரிடம் இருந்து தப்பிப்பதுடன், குழந்தை பெறுகிறார் அந்த பெண். அந்த குழந்தை அவரை மரணத்தில் இருந்து மீட்டு வருகிறது.
விஜய் ஆண்டனியின் தாயார், தனது மகனை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். தாயின் கனவை நனவாக்க சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, படித்துக்கொண்டே அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூசன் சொல்லி கொடுக்கிறார். இதில் விஜய் ஆண்டனிக்கும் ரவுடிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரால் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத முடியாமல் போகிறது. சென்னையில் நடக்கும் கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெறுகிறார். அவர் குடியிருக்கும் பகுதியில் நல்லது செய்ய முயற்சிகளை எடுக்கிறார். ஆனால் எதிரிகள் அவரை வேலை செய்ய விடாமல் தொல்லை கொடுக்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் அம்மாவை வைத்து மிரட்டி கவுன்சிலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கின்றனர். அதன் பிறகு ரவுடிகளுக்கும் அரசியவாதிகளுக்கும் எதிராக விஜய் ஆண்டனி எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் ஆண்டனி ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். கதாநாயகியாக வரும் ஆத்மிகாவுக்கு சொல்லும்படியான காட்சிகள் எதுவும் இல்லை. இருந்தாலும் வரும் காட்சிகளில் அழகு, பதுமையுடன் வந்து செல்கிறார். இப்படத்தில் நிறைய வில்லன்கள் இருக்கிறார். அதில் குறிப்பாக கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜு, உருவத்திலேயே பயமுறுத்தி வில்லத்தனத்திலும் மிரட்டி இருக்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபா, நேர்த்தியாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம் . ஹரீஷ் அர்ஜுனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், திரைப்படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதனை கையாண்டுள்ள விதம் மிக சிறப்பு. ஒரு கவுன்சிலரால் என்னவெல்லாம் செய்ய முடியும், அவருக்கு வரும் தடைகள் என்னென்ன என்பதை புதுவிதமாக எடுத்து சொல்லி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘கோடியில் ஒருவன்’ தனித்து வெற்றி பெறுவான்
நடிகர் : விஜய் ஆண்டனி
நடிகை : ஆத்மிகா
இசை : நிவாஸ் கே பிரசன்னா, ஹரீஷ் அர்ஜுன்
ஓளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமா
இயக்குனர் : ஆனந்த் கிருஷ்ணன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது